இ பாஸ் எதிரொலி... வெறிச்சோடிய நீலகிரி !
இ பாஸ் நடைமுறையால் வெளிமாநில வாகனங்கள் வரத்து குறைந்து, எல்லைப் பகுதிகள் வெறிச்சோடியது.
நீலகிரி மாவட்டத்திற்கு இபதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு இபாஸ் நடைமுறை அமலுக்கு வந்ததால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் மாவட்டங்களில் இருந்து தேவையில்லாமல் மாவட்டத்திற்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் இபாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதனால் தமிழக-கர்நாடக எல்லை கக்கனல்லா பகுதியில் வாகனங்களின் வரத்து வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து கேரளா மற்றும் தமிழக பகுதிக்கு வரும் காய்கறி மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அதிகளவில் வருவதாகவும், பொதுமக்கள் வரும் கார்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் வெகுவாக குறைந்து விட்டதாகவும், அவ்வாறு வரும் வாகனங்களையும் சோதனை செய்து இபாஸ் அனுமதியுடன் வரும் வாகனங்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், முக்கிய காரணங்கள் தவிர்ந்த தேவையற்ற காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அனுமதி வழங்கப்படாத காரணத்தால் மிக குறைந்த அளவிலான கார்கள் மட்டுமே வருவதாக அங்குள்ள போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளான நாடுகாணி, சேரம்பாடி, நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளத்தால் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளும் வாகன வரத்து வெகுவாகக் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.