விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 40 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இலங்கை தமிழர்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பில் 40 குடும்பங்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்:
தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர்கள் அனைவரும் எங்கே, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான் என்ற நோக்கத்தில், தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும்.
முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பொறியியல் வேளாணமை முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி,மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி,விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்
அதனை செயல்படுத்தும் விதமாக, அனைத்து முகாம்களையும் அந்தத் துறையின் அமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கக் கூடியவர்கள் எல்லா முகாம்களையும் சென்று பார்வையிடவும், தமிழகத்தில் இருக்கின்ற 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்து, அவர்களுக்கு என்ன உடனடித் தேவை என்பதைக் குறித்து அறிந்து, இலங்கைத் தமிழர்களின் முகாம்களில், மிகவும் பழுதடைந்தடைந்த நிலையில் உள்ள வீடுகளை கட்டித்தரவும், அவர்களது அனைத்து முகாம்களிலும் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறார் முதல்வர்
அதனடிப்படையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் பேரூராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பில் 40 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
இது போன்று இலங்கை தமிழர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினுடைய அனைத்து நலத்திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்