திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதன் உரிமையாளர் மோசமாக தாக்கும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவம் பயில நீட் நுழைவு தேர்வு (NEET Exam) அவசியமாகிவிட்ட நிலையில் பல்வேறு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பள்ளி பயிலும்போதே நீட் பயிற்சி மையங்களுக்கு அனுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் சிற்றூர்களில் கூட தனியார் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் அவ்வாறாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க JAL நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையம் இயங்கி வந்துள்ளது. இங்கு பள்ளிப்படிப்பு முடித்த, மற்றும் பள்ளியில் படித்து வரும் மாணவர்களும் நீட் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் மாணவர்களை மோசமாக நடத்துவதாக புகார்கள் கிளம்பியது.
சமீபத்தில் பயிற்சி ஆசிரியர் வருவதற்கு முன்னதாக பயிற்சி வகுப்பில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு பிரம்போடு வந்த ஜலாலுதீன் அவர்களை மூர்க்கமாக பிரம்பால் அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல செருப்புகளை சரியாக அடுக்கி வைக்கவில்லை என மாணவிகள் மீதும் செருப்பை வீசி தாக்கியுள்ளார் ஜலாலுதீன்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகார் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜலாலுதீன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edit by Prasanth.K