எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: நாராயணசாமி கூறுவது என்ன?
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து.
புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த நமச்சிவாயம் கட்சியினருடன் ஏற்பட்ட அதிருப்தியால் தலைவர் பதவியிலிருந்து விலகி இருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தொடர்ந்து வரும் அவர் சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களோடு பாஜகவில் இணைய உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை நமச்சிவாயமே நேரடியாக புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் கொடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியே அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ததாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனோடு புதுச்சேரியில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். நமச்சிவாயம் மற்றும் தீப்பாஞ்சான் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, திமுக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் புதுச்சேரி அரசு பெரும்பான்மையுடன் இருக்கிறது. சுயநலத்திற்காக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.