அமித்ஷா அவதார புருஷன் இல்லை; தமிழ்நாடு குஜராஜ் இல்லை - நாஞ்சில் சம்பத் அதிரடி
அதிமுக இரு அணிகளின் இணைப்பு என்பது மக்களை ஏமாற்றும் வேலை என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார்.
எனவே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறையை எடப்பாடி அணி நிறைவேற்றிவிட்டதால், எந்த நேரமும் இரு அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், சிலர் அணிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
அதேபோல், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது ஆதரவு எம்.ல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் கலந்து கொண்டு வெளியே வந்த நாஞ்சில் சம்பத், செய்தியாளர்களிடம் பேசிய போது “எல்லா அறைகூவல்களையும் சந்திக்க தினகரன் தயாராக இருக்கிறார். பதவிக்காக விதை நெல்லையே அவர்கள் விற்க தயாராகி விட்டார்கள். அணிகள் இணைப்பு என்கிற பெயரில் இவர்கள் நடத்தும் கேலிகூத்து நீண்ட நாட்கள் தொடர வாய்ப்பில்லை. அவர்கள் கூறும் எந்த நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை.
கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அமித்ஷா ஒன்றும் அவதார புருஷன் இல்லை. தமிழ்நாடு ஒன்றும் குஜராத் இல்லை” என அவர் தெரிவித்தார்.