புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (10:30 IST)

500 கிலோ மீட்டர் நடந்து வந்த தமிழக இளைஞர் – மாரடைப்பு வந்து மரணம்!

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் மகாராஷ்டிராவில் இருந்து நாமக்கல் நோக்கி நடந்தே வந்த தமிழக இளைஞர் ஒருவர் மாரடைப்பால் பலியாகியுள்ளார்.

கொரொனா பரவலைத் தடுக்கும் விதமாக 21 நாட்கள் இந்தியாவில் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊரை விட்டு வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பேருந்துகள் எதுவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கு பல நூறு கிலோமீட்டர்களை மக்கள் நடந்தே செல்கின்றனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்த லோகேஷ் என்ற 23 வயது தமிழக இளைஞர் தனது 29 நண்பர்களுடன் 1300 கிலோமீட்டரை நடந்து தமிழகத்துக்கு வரத் திட்டமிட்டுள்ளனர். 9 நாட்களில் 500 கிலோமீட்டர்களைக் கடந்த நிலையில் நடந்து வந்தவர்களை செகந்திராபாத் போலீஸார் தடுத்து அங்குள்ள முகாமில் தங்க வைத்திருந்தனர்.

அப்போது லோகேஷுக்கு திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மரணமடைந்த லோகேஷ் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சமபவமானது தமிழக மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.