செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (08:20 IST)

ரஜினிக்கு எதுக்கு அளப்பரிய முதன்மைத்துவம்? பொரிந்து தள்ளிய சீமான்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? என சீமான் கேள்வி. 
 
சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்தார் என்பதும் இதுகுறித்த அவருடைய டிவிட்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை அடுத்து ரஜினிக்கும் டேக் செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வருக்கு அடுத்து மத்திய அமைச்சர் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் நியமனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்தார். 
இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. 
 
நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். 
 
இதில் ரஜினிகாந்தை குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது? பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? 
 
மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன? அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்? 
அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? 
 
அரசின் செயல்பாடுகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும், நிர்வாகச் சீரமைப்புகளுக்கும், நியமன முறைமைகளுக்குமென இவை யாவற்றிற்கும் துளியும் தொடர்பற்றவரை மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய ஒரு விவகாரத்தில் எதற்குக் குறிப்பிட்டுப் பதிவிட வேண்டும்? அவரைக் கேட்டுத்தான் நியமனங்கள் நடக்கிறதா? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா?
 
ஆகவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடனான தனது அலுவல் ரீதியான தொடர்புகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.