1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (18:40 IST)

கொரோனா அபாயம் - மெத்தனமான அரசை கண்டித்த சீமான்!!

கொரோனா வைரஸ் குறித்து இந்தியா, தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை மூலம் கொரோனா குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளவை சில பின்வருமாறு... 
 
சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி சீனா முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற சூழ்நிலையில், வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 12000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுவரை இல்லாத வகையில் உலகையே உலுக்கி வரும் இந்தக் கொடிய வைரஸ் நோய், சீனா மட்டுமின்றி அங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவி இன்று அதன் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது கவலையளிக்கிறது. 
 
இந்த வைரஸைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சீன அரசு மட்டுமன்றி, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற எல்லா நாடுகளும் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிற இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடும், உலகின் மோசமான பொது சுகாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றானதுமான இந்திய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தொடக்கம் முதலே இந்தப் பிரச்சனையை அணுகுவதில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது.
 
தற்போது கரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு. நோய் பரவாமல் இருக்க எந்த விதமான நடைமுறைகளைக் கையாள்கிறது என்பது குறித்தோ ஒரு வெளிப்படையற்றத் தன்மையையே இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுவரை கடைபிடித்து வருகிறது. 
 
இந்த அறிவிப்பிற்குப் பிறகும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இது குறித்து நாட்டு மக்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காதது ஒரு அக்கறையற்றத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் இதன் பாதிப்பு உணரப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எந்தவித உடனடி தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருப்பது போல் தெரியவில்லை.
 
தமிழ்நாடு அரசு அவசரகால நடைமுறைகளாக தமிழ்நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகளை இது குறித்து அதிகக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தவும், இந்த நோய் மற்றும் அதன் தாக்கம் குறி்த்தத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி மக்கள் முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வுடன் இருக்க உதவுமாறும், நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளா எல்லைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு தமிழகத்தில் பரவாமல் தடுக்க தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.