செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (10:08 IST)

நளினி, முருகன் : தொடரும் உண்ணாவிரதம்– முதல்வருக்கு உருக்கமானக் கடிதம் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி முருகன் தம்பதியினர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் சம்மந்தப்பட்ட வழக்கு 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வெளியிட்டது. அதை அடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் அதுகுறித்த எந்த பதிலும் அளிக்காமல் அந்த சட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

அமைதியாக இருக்கும் ஆளுநருக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் பல்வேறு வகையானப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து தனது மகன் உள்ளிட்ட ஏழுபேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெ எனக் கோரிக்கை வைத்தார். ஆனாலும் மத்திய அரசும் ஆளுநரும் மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் கள்ளமௌனம் காத்து வருகின்றனர்.

இதையடுத்து தங்களது விடுதலை தொடர்பான ஆவணத்தில் தமிழக ஆளுநர் காலம் கடத்துவதாகக் கூறி, வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் 8-வது நாளாகவும், பெண்கள் சிறையில் உள்ள நளினி 9-வது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவர்கள் இருவரின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளதால் இருவரும் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து உண்ணாவிரதத்தில் இருக்கும் முருகன் சிறை அதிகாரிகளின் மூலம் தமிழக முதல்வருக்கு உருக்கமானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உண்ணாவிரதத்தின் மூலம் நான் இறந்து விட்டால் எனது உடலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்க வேண்டும் ‘ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சிறை மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தனது மகள் நளினியையும், மருமகன் முருகனையும் காப்பாற்ற வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.