எனக்கு சசிகலாதான் எல்லாம் : ஏன் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?


Murugan| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:52 IST)
அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி சசிகலாவிற்கு இருக்கிறது எனில், அவரை ஏற்கும் தகுதி எனக்கில்லை எனக்கூறி பரபரப்பை கிளப்பியவர் அதிமுக பிரச்சார பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், அதிமுகவில் பெரிதாக அவர் தலைகாட்டவில்லை. அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சசிகலா பின்னால் சென்ற போதும் இவர் போயஸ்கார்டன் பக்கமே செல்லவில்லை. மேலும், சசிகலாவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறியதோடு, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார் நாஞ்சில் சம்பத்.
 
இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கான சிலுவையை தூக்கி சுமப்பவர் சசிகலா எனக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது அவரின் மனைவி சசிகலாவை பற்றித்தான். ஆம் அவரின் மனைவியின் பெயர் சசிகலா. அவரின் மனைவி பற்றி அவர் கூறியதாவது:
 
என்னுடைய திருமணத்திற்கு பின் என்னுடைய மனைவியுடன் நான் அதிக நாட்கள் செலவழித்தது இல்லை. பலமுறை அரசியல் மேடைகளிலேயே தாக்கப்பட்டேன். சிறைக்கும் சென்றுள்ளேன். ஆனால், மேடைகளில் பேசாதீர்கள் என அவர் ஒருநாளும் கூறியது இல்லை. என்னை அவர் புரிந்து கொண்டு என்னுடன் வாழ்க்கை நடத்தினார்.
 
எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என அவர் கேட்டதில்லை. என் பிள்ளைகள் மற்றும் என் பெற்றோர்கள் அனைவரையும் அவள் கவனித்துக் கொண்டாள். அதனால் எனக்கு குடும்ப சுமையே இல்லை.  கடந்த 8 மாதமாக எனக்கு எந்த வருமானமும் இல்லை. அதனால், தன்னுடைய நகைகளை அடகு குடும்பத்தை அவர்தான் காப்பாற்றி வருகிறார். எனக்கான சிலுவை அவர் சுமந்து வருகிறார். மணம் முடித்த நாள் முதல் கணவனே கண் கண்ட தெய்வம் என அவர் வாழ்ந்து வருகிறார். எனக்கு எல்லாம் அவர்தான்” என அவர் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :