புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (13:32 IST)

சிறையில் ஜீவசமாதி அடையப் போகும் முருகன் - பதட்டத்தில் சிறை அதிகாரிகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதி அடைய முயற்சி செய்வதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


 

 
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், அவரின் மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் கடந்த சில மாதங்களாகவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு காவி உடை அணிந்து, ஜடாமுடி வளர்த்து பார்ப்பதற்கு ஒரு சாமியார் போல் மாறினார் முருகன். மேலும், சிறை வாழ்க்கை தொடர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை எனவும், அகஸ்டு 18ம் தேதி(இன்று), தான் ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வேண்டும் என சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அதற்கு டிஜிபி அனுமதி கொடுக்கவில்லை.
 
ஆனாலும், கடந்த சில மாதங்களாகவே ஒருவேளை மட்டும் உணவும் மற்ற வேளைகளில் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தார். இந்த மாத தொடக்கத்திலிருந்து மூன்று வேளையும் பழங்களை மட்டுமே அவர் சாப்பிட்டு வந்தார். 


 

 
இந்நிலையில் அவர் ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய இன்று காலை முதல் யாரிடமும் பேசாமல் அமைதியாக சிறையில் உள்ள பெருமாள் கோவில் நீண்ட நேரம் தரிசனம் செய்தார். மேலும், உணவு சாப்பிடவும் அவர் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர் சமாதானம் அடையவில்லை. 
 
அவரின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். அவர் சாப்பிட மறுத்தாலும், ஜீவசமாதி அடைய முயற்சி செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 
இந்த விவகாரம் வேலூர் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.