1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (10:58 IST)

கேரள அரசின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

கேரளாவிற்கு ஏற்பட்ட பேரழிவிற்கு தமிழகமும் காரணம் என கேரள அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கேரள வெள்ளத்தின் போது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 
 
இந்நிலையில், நீர்மட்டத்தை குறைக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம். முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டது வெள்ள பாதிப்பிற்கு ஒரு காரணம் என்று கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 
 
இதுகுறித்து இன்று பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையைத் திறந்ததால் கேரளாவில் வெள்ளம் வரவில்லை. அணை பலமாக இருக்கிறது. கேரள வெள்ளத்திற்கும் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்ததால்தான் கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே கேரள அரசு, தமிழக அரசின் மீது கூறியுள்ள குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட நியாயம் கிடையாது என முதலமைச்சர் தெரிவித்தார்.