ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (12:35 IST)

குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளின் செயல்! – விஜய் சேதுபதிக்கு கனிமொழி ஆதரவு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கண்டனங்கள் எழுந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாசமாக சிலர் பேசியதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஈழ எதிர்ப்பு மனநிலை கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

முன்னதாக சிலர் விஜய் சேதுபதியை விலக கோரி வலியுறுத்தி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் அவதூறாக பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி கனிமொழி “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.