1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (11:29 IST)

ஜெயலலிதா அணிவகுப்பு வாகனத்தில் பணம் கடத்தல்; ஏன் தடுக்கவில்லை - வைகோ கேள்வி

ஜெயலலிதாவின் அணிவகுப்பில் செல்லும் வாகனங்கள் மூலமாகவும் பணம் கெண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனை எல்லாம் தேர்தல் ஆணையம் தடுப்பதாக இல்லை என்று மதிமுக மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
 

 
நேற்று செவ்வாயன்று தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வைகோ கோவை வந்தடைந்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ”தேர்தல் களத்தில் நிற்கிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி விவசாயிகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் மே 2ஆம் தேதி பல்லடத்தில் கட்சி சார்பற்ற விவசாய கூட்டு இயக்கங்கள் சார்பாக விடியல் அறிவிப்பு மாநாடு சங்க தலைவர் எம்.எஸ்.பழனிசாமி தலைமையில் நடத்தப்படுகிறது. இதில், நானும், கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறோம். இந்த மாநாட்டில் எந்த கட்சிக் கொடியோ, பேனரோ இருக்காது. விவசாய சங்கங்களின் கொடிகள், அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேனர்கள் மட்டுமே இருக்கும்.
 
இந்த மாநாட்டில் விவசாயிகள் பெரும்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அந்த மாநாடு மூலமாக விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து முடிவுக்கு வருவோம். ஏற்கெனவே, விவசாயிகள் வாங்கியுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை அறிவித்துள்ளோம்.
 
விவசாயத் தொழிலை எப்படி மூன்று மடங்கு லாபகரமாக்குவது என்பது குறித்த திட்டத்தையும் அறிவிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியை வழிகாட்ட பல்துறை அறிஞர்கள், நிபுணர்களைக் கொண்ட நெறிமுறை குழுவை அமைப்போம்.
 
சகாயம் போன்ற அதிகாரிகளை உரிய இடத்தில் வைத்து ஆட்சி செய்வோம். லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என சில கட்சிகள் சொல்கின்றனர். லோக் ஆயுக்தாவை கொண்டு வருவோம் என முதன்முதலில் சொன்னதே நாங்கள்தான். கண்டிப்பாக, அவர்கள் அந்த சட்டத்தை கொண்டு வர மாட்டார்கள்.
 
ஏனென்றால் ஊழல் செய்வதே அந்த கட்சிகள்தான். நேர்மையான நிர்வாகம், விரைவான சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உறுதிச் சட்டத்தைக் கொண்டு வருவோம். மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படக்கூடிய வருமான இழப்புக்கு ஈடுகட்ட என்ன மாற்று ஏற்பாடு என்பதை அறிவிப்போம்.
 
மின்தடையும், மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த மின்சார தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்போம். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகள் வழங்கியுள்ள கடனை எங்கள் அரசு ஏற்கும். பெங்களூருக்கு இணையாக கோவையில் மென்பொருள்துறை நகரமாக கொண்டு வருவோம்.
 
சிறுதாவூர் பங்களாவில் கண்டெய்னர் லாரியில் பணம் கெண்டு செல்லப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அங்கு சென்று பார்த்துவிட்டு ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்கள்.
 
தற்போது, ஜெயலலிதாவின் அணிவகுப்பில் செல்லும் வாகனங்கள் மூலமாகவும், போலியான 108 ஆம்புலன்ஸ் மூலமாகவும், எஸ்.பி. வாகனங்களிலும் பணம் கெண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனை எல்லாம் தேர்தல் ஆணையம் தடுப்பதாக இல்லை.
 
திமுகவும் கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு வாக்காளர்களிடம் கொண்டு சென்று கொடுப்பதற்காக தருணம் பார்த்து காத்திருக்கிறது. மாறாக, கோவில்பட்டியில் 200 மீட்டருக்கு அப்பால் சென்று அறிக்கையை வாசித்த என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.