திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2016 (10:39 IST)

அவசரக் கோலத்தில் அள்ளித் தெளி - மோடியை தாக்கிய கருணாநிதி

பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி" என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. 
 
ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் "கியூ"வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை. 
 
வியாபாரிகள் எந்தவிதமான வியாபாரமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கின்றனர். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை.

என அவர் குறிப்பிட்டுள்ளார்