திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (12:45 IST)

ஆவின் பால் விலை குறைப்பு; கொரோனா நிவாரணம்! – கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று பதவியேற்று சட்டமன்ற அலுவலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய திட்டங்கள் பலவற்றிற்கு கையெழுத்திட்டுள்ளார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா ரூ.4000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் ஆவின் பால் விலையை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்பதற்கான கோப்புகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.