1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (16:26 IST)

மறைமுக தேர்தலை நடத்தியது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 
 
கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இதில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அவரச சட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்தது. 
 
இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறார். 1996 வரை தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்தான் இருந்தது அதை நேரடி தேர்தலாக மாற்றியது திமுகதான்.
 
பிறகு 2006ல் மீண்டும் அதை மறைமுக தேர்தலாக மாற்றினார்கள். கேட்டால் கவுன்சிலர்கள் ஒரு கட்சியாகவும், மேயர் ஒரு கட்சியாகவும் இருந்தால் ஒன்றுபட்டு பணிபுரிய முடியாது என்றார்கள். ஸ்டாலின் அவர் இயற்றிய சட்டத்தை அவரே எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் கூறியதாவது, அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக. அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது என விளக்கம் அளித்துள்ளார்.