ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (16:16 IST)

அகழ்வாய்வில் கிடைத்த சீன நாட்டின் உடைந்த பீங்கான் துண்டு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..! .

அகழ்வாய்வில் சீன நாட்டின் உடைந்த பீங்கான் துண்டு கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
அலைகடல் நடுவில் கலம் பல செலுத்திப் பூர்வ தேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட, தமிழ் நாட்டின் பெருமைக்குரிய பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் அரண்மனை அமைந்திருந்த கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதியில் தமிழ் நாடு அரசின் தொல்பொருள் துறை தொடர்ந்து அகழ்வாய்வினை மேற்கொண்டு வருகின்றது. 
 
இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு , அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
 
பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
 
Edited by Mahendran