திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2017 (11:49 IST)

சவால் விட்டு ஜகா வாங்கிய செங்கோட்டையன்: ஓட வைத்த அன்புமணி?

சவால் விட்டு ஜகா வாங்கிய செங்கோட்டையன்: ஓட வைத்த அன்புமணி?

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்னர் தனது துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்த தயாரா என தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விட்டார். இதனை பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் தனது சவாலில் இருந்து ஜகா வாங்கியுள்ளார்.


 
 
பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், தம்முடன் அந்த துறை குறித்து பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்னர் சவால் விட்டார்.
 
இந்த சவாலை தருமபுரி தொகுதி எம்பியும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஏற்றார். செங்கோட்டையனின் சவாலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருப்பதாக அன்புமணி கூறியிருந்தார்.
 
இதனையடுத்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு வரும் 12-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன் என கூறியிருந்தார். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து சவாலை ஏற்ற அன்புமணியுடன் அமைச்சர் செங்கோட்டையன் விவாதம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் சவால் விட்ட அமைச்சர் செங்கோட்டையனே ஜகா வாங்கியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியபோது, இந்த அரசு மனசாட்சியோடும், வெளிப்படையாகவும் செயல்படுகிறது. இதுவரை கொடுக்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழ். 4000 ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகளை சில மாதங்களுக்கு முன் நிரப்பினோம். 13000 ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாற்றம் கவுன்சிலிங் மூலம் நடத்தப்பட்டது இவற்றை பார்த்து அவர் தெரிந்துகொள்ளட்டும்.
 
நான் இதுவரை மனசாட்சியோடு தான் செயல்படுகிறேன். அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்து என்னிடம் பேசட்டும் என ஜகா வாங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.
 
தானாக முன்வந்து சவால் விட்டுவிட்டு தற்போது அந்த சவாலை அன்புமணி ராமதாஸ் ஏற்ற பின்னர் சொன்னபடி விவாதத்திற்கு வராமல் அமைச்சர் செங்கோட்டையன் ஜகா வாங்கியது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.