திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (15:02 IST)

வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது: தினகரனை சீண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது: தினகரனை சீண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

வரும் 12-ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து தினகரன் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அவரை சீண்டும் விதமாக அவரது அறிவிப்பு நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
கடந்த 28-ஆம் தேதி கூடிய அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தில் வரும் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடும் என்று ஒன்றிணைந்த அதிமுக இரு அணிகளும் அறிவித்தன. இதில் பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கும் மிக முக்கிய முடிவும் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தினகரன், அதிமுக விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் அதிமுகவில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் 12-ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூடும் என்று சிலர் செய்தி பரப்பி வருகின்றனர்.
 
இந்த செய்தியை அதிமுகவினர் யாரும் நம்ப வேண்டாம். மீறி கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
 
தினகரனின் இந்த அறிவிப்புக்கு எதிர் தரப்பில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அதில், நாங்கள் 100 சதவீதம் ஒற்றுமையுடன் இருக்கிறோம். பொதுக்குழுவை கூட்ட முழு அதிகாரமும் எங்களுக்கு உள்ளது.
 
கட்சி விதிப்படி மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவைக் கூட்ட முடியும், பொதுக்குழுவைக் கூட்டக்கூடாது என்று சொல்ல தினகரனுக்கு எந்த உரிமையும் கிடையாது.
 
கட்சியிலிருந்து பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட தினகரன் பொதுக்குழுவை பற்றி பேசுவது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. தலைமை கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்களின் வேண்டுகோளை ஏற்று பொதுக்குழுவை கூட்டுகிறோம்.
 
தினகரன் கட்சி விதியை சரியாக படிக்கவில்லை. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு கொடுத்து 15 நாட்கள் இடைவெளியில் பொதுக்குழுவை கூட்டுகிறோம். இதில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கட்சியைக் கைப்பற்றலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் ஈடேராது என அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை சீண்டியுள்ளார்.