திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2016 (09:25 IST)

தி.நகரில் வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை : சென்னையில் அதிர்ச்சி

தி.நகரில் வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொலை

சென்னை தி.நகரில் தனியாக வசித்து வந்த 65 வயது கோடீஸ்வர பெண்மணி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


 
தியாகராயநகர், அபிபுல்லா சாலை, வித்யோதயா பிரதான சாலை சந்திப்பில் உள்ள ஒரு பங்களாவில் தனியாக வசித்து வந்தவர் சாந்தி(65). இவர் திருமணமாகாதவர். இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் தனியாக வாழ்ந்து வந்தார். 
 
இவரை, சென்னை பெருங்குடியில் வசித்து வரும், அவரின்  தாய் மாமன் சோமசுந்தரம் என்பவர் மட்டும் அவ்வப்போது பார்த்துவிட்டு செல்வார். சோமசுந்தரத்தின் மகன் ரமேஷ், அவருக்கு சில உதவிகளை செய்து வந்தார். தந்தையின் பென்ஷன் பணத்தில் வாழ்க்கை ஓட்டி வந்துள்ளார் சாந்தி.
 
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரமேஷ், சாந்தியின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் சாந்தி போனை எடுக்கவில்லை. எனவே, திங்கட்கிழமை(நேற்று) காலை முயற்சி செய்துள்ளார். அப்போதும் அவர் போனை எடுக்கவில்லை. 
 
எனவே சந்தேகம் அடைந்த ரமேஷ், நேற்று காலை அவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு சாந்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவரின் தலையில் ரத்தகாயம் இருந்தது. அவரின் கழுத்து துணியால் நெறிக்கப்பட்டு இருந்தது.
 
இதுபற்றி ரமேஷ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
அவரது வீட்டில் 60 பவுன் நகை இருந்தது. வீட்டில் உணவு சமைக்காமல், மூன்று வேளையும் அவர் ஹோட்டலில்தான் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் தங்கியிருக்க்கும் வீட்டின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது.  சொத்துக்காகவோ அல்லது நகைக்காக யாராவது அவரை கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
சென்னையில், தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொலை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.