புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 1 ஜூன் 2024 (10:44 IST)

இன்றுடன் முடிவுக்கு வருகிறது தியானம்.! மாலை டெல்லி புறப்படுகிறார் பிரதமர் மோடி.!

Modi
கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக தியானம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இன்று பிற்பகலில் தனது 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்கிறார்.
 
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதி கட்ட தேர்தலானது நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பஞ்சாப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தை தொடங்கினார். மூன்றாவது நாளாக தியானம் செய்து வரும் பிரதமர் மோடி, இன்று காலை மீண்டும் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வந்தார்.
 
அப்போது மேகமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் மோடியால் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் தியான மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி தனது தியானத்தை தொடர்ந்து வருகிறார்.

 
காவி உடை அணிந்து தியானம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தனது  45 மணி நேர தனது தியானத்தை நிறைவு செய்கிறார். இதனை தொடர்ந்து இன்று மதியம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்குகிறார்.   இதன் பின்னர்  ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.