புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By இரா காஜா பந்தா நவாஸ்
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (15:15 IST)

யாரை திருப்திப்படுத்த, யாரை அடக்க இந்த மாஸ் FIRs?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கும் மக்கள் மீது அரசு மாஸ் FIRs என்னும் அரச பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. 

 
குடியுரிமைத்திருத்தச்   சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புறக்கணித்து கடையநல்லூரில் கடையடைப்பு மற்றும் அமைதி பேரணி நடந்தது. இதில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 
 
பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் 217 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி வந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 5 ஆயிரம் பெண்கள், 3 ஆயிரம் குழந்தைகள் உட்பட 13 ஆயிரம் பேர் மீது எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத ரிதியாக இந்தியாவை துண்டாட எண்ணும் பாசிச சக்திகளின் அதிகாரத்துக்கு விலைக்கு போனது இந்த அரசு. யாரை திருப்திப்படுத்த, யாரை அடக்க இந்த  மாஸ் FIRs?
 
உண்மையில் தமிழக முஸ்லீம் சமூகம் மோடி, அமித்ஷா, பழனிச்சாமி, அன்புமணி ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். முன்பு எப்போதும் இல்லாமல் தௌஹித், சுன்னத் ஜமாத் என்று பிரிந்துக் கிடந்த ஒரு சமூகம், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் களத்திற்கு வந்திருக்கிறது.
 
உதிரத்தில் நிறம் இங்கு வேறு இல்லை; காற்றுக்கு திசைகள் இல்லை; எதிர்க்கருத்து சொல்வது போராடுவது தேச துரோகம் என்றால் அதற்கு தான் தண்டனை மாஸ் FIRs என்றால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது சமூகம் இந்த அரசு அதன் சிறைகளை தயார் செய்து கொள்ளட்டும். 
 
இரண்டு லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மையை தங்களின் அருகில் உள்ள காவி அணியாத அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக்  கொள்ளவும். 

 
             இரா காஜா பந்தா நவாஸ்
                  ([email protected])