வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (10:29 IST)

தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு - இந்திய தர நிர்ணய அமைவனம்!

தங்க நகைகளில் இனிமேல் HUID குறியீடு கட்டாயம். இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் அறிவிப்பு. HUID குறியீடு பின்பற்றபடாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்துள்ளது.
 
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் அலுவலகம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
 
இதில், ஏப்ரல் 1 (நாளை) முதல் HUID எனும் ஆறு இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை எனவும், தங்க நகைகளை வாங்கும் முன் HUID குறியீடு உள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய தர நிர்ணய அமைவனம், கோயம்புத்தூர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி மற்றும் விஞ்ஞானி கோபிநாத் பேசுகையில்,
 
'HUID எனும் தனித்துவமான அடையாளம் என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களை கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். BIS-ல் பதிவு பெற்ற நகை விற்பனையாளர்கள் தாங்கள் தயாரித்த தங்க நகைகளை BISல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். 
 
ஹால்மார்க் மையங்கள் BIS வழங்கிய நடைமுறைகளை பின்பற்றி நகைகளில் தூய்மை தன்மையை பரிசோதித்து, உரிய தூய்மை தன்மை உறுதி செய்த பின்னரே நகைகளில் லேசர் மூலம் BIS முத்திரை, தங்கத்தின் தூய்மை மற்றும்  HUID ஆகிய மூன்று கட்டாய குறியீடுகள் குறிக்கப்படுகிறது. நுகர்வோர் மற்றும் நகை வாங்குபவர்கள் BIS Care App என்னும் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து தங்க நகைகளின் உண்மை தன்மையை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இந்த நடைமுறைகளை பின்பற்றாத தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.