வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (14:04 IST)

எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம்: மர்ம நபர் போன்.. சில மணி நேரங்களில் கைது..!

எடப்பாடி பழனிச்சாமி மீது வெடிகுண்டு வீசுவோம் என்று மர்மநபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்த நிலையில் அவரை ஒரு சில மணி நேரங்களில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தென்காசி மாவட்டம் நெற்கட்டு சேவலில் அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவிக்க வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக தென்காசி மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்த நிலையில் எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து போலீசார் ஆய்வு செய்த நிலையில் அந்த செல்போனின் சிக்னல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று ஒரு சில மணி நேரத்தில் அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 32 வயது வெள்ளத்துரை என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்த விசாரணையில் கடந்த ஆண்டும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Edited by Mahendran