திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (12:06 IST)

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு காவல்துறையை இறையாக்குவதா.? அண்ணாமலை கண்டனம்.!!

Annamalai Stalin
ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகிறது என்று அண்ணாமலை  அச்சம் தெரிவித்துள்ளார்.
 
கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு, தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்றும் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஆனால், தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.