1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (16:10 IST)

ஓ.பி.எஸ் அணி என ஒதுக்காதீர்கள் - மைத்ரேயன் நேரடி குற்றச்சாட்டு

ஓ.பி.எஸ் எணி என தங்களை ஒதுக்க வேண்டாம் என அதிமுக எம்.பி. மைத்ரேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
இரு அணிகள் இணைந்து விட்டாலும், தனக்குரிய அங்கீகாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்னும் தரவில்லை என ஓ.பி.எஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக இதற்கு முன்பே செய்திகள் வெளியானது.   
 
இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான அதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் “ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என ஒரு பதிவை இட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கும் இடையே இன்னும் புகைச்சல் நீடிக்கிறது என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார்.    
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ் மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து பிரிந்து தர்ம யுத்தத்தை மீண்டும் தொடங்குவார் என செய்திகள் வெளியானது.  
 
அந்நிலையில், பொதுஇடத்தில் மைத்ரேயன் இப்படை கருத்து தெரிவிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல்,  இது அவரின் தனிப்பட்ட கருத்து என துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருந்தார்.  
 
இந்நிலையில், இன்று மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் “ நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் இது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்து என கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
அந்நிலையில், அதே முகநூலில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்களை ஓபிஎஸ் அணி என்று ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதிமுக அணிகள் இணைந்தே இருக்கிறது என அதிமுக அமைச்சர்கள் கூறி வரும் வேளையில், மைத்ரேயன் இதுபோல் கருத்து தெரிவித்துது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.