சிங்கிள் சிகரெட்டுக்கு சண்டை; டீக்கடையை கொளுத்தி விட்ட நபர்!
மதுரை அருகே சிகரெட் தராததால் கோபத்தில் நபர் ஒருவர் டீக்கடையை தீக்கிரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதேபகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் நடத்தி வந்த டீக்கடைக்கு சென்று சிகரெட் கடனாக கேட்டுள்ளார். அதற்பு பூமிநாதன் தர முடியாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு பூமிநாதனின் டீக்கடை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சித்ததுடன், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் டீக்கடைக்கு குணசேகரன் நெருப்பு வைத்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து குணசேகரனை கைது செய்து விசாரித்தப்போது மேற்கூறிய சம்பவங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் ஆச்சர்யபட கூடிய செயலாக தீயை பற்ற வைத்த அவரே மற்றவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோது உடன் நின்று உதவியிருக்கிறார். அவர் மனநலம் சரியில்லாதவர் என்றும், ஏற்கனவே அவர் மீது காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு சிகரெட் தராத காரணத்தால் மொத்த கடையையுமே தீக்கிரையாக்கிய சம்பவம் அச்சம்பத்து பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.