16 வயது சிறுமி வன்கொடுமை; குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தகர்ப்பு!
மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்தவர்களின் வீடுகள் ஜேசிபி எந்திரம் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நைகர்ஹி என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு 16 வயது சிறுமியும், அவரது நண்பரும் சென்றுள்ளார்கள். கோவிலுக்கு சென்று விட்டு அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களை 6 பேர் கொண்ட இளைஞர் கும்பல் மறைத்துள்ளனர்.
அவர்களை மிரட்டி அருகே இருந்த அருவி அருகே அழைத்து சென்ற அவர்கள் அங்கு அந்த சிறுமியின் உடன் வந்த நண்பரை தாக்கிவிட்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்துள்ளனர்.
மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளிகளான 6 பேரை தேடிய போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். அதில் இருவர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் அதேசமயம் அவர்களுக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றவாளிகள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.