ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (15:26 IST)

என்னைய கடத்தவே இல்லைங்க.. மருமகன் வீட்டுக்கு போயிருந்தேன் – கவுன்சிலர் வாக்குமூலம்!

ராமநாதபுரத்தில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8வது வார்டில் போட்டியிட்டவர் சாத்தையா. திமுக சார்பில் போட்டியிட்ட இவர் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் சுயேட்சை வேட்பாளரைவிட 29 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த 3ம் தேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சாத்தையா அன்றே மாயமானார். இதனால் சாத்தையா காணமல் போய்விட்டது குறித்து அவரது மகன் ராஜா மதுரை கிளை நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சாத்தையாவை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீஸ். ஆனால் சாத்தையாவோ தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தனது மருமகன் வீட்டில் தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சினையை கொண்டுவந்து நீதிமன்றத்தின் நேரத்தை விரயம் செய்ததற்காக ராஜாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.