நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட உறுதியேற்போம்! - அன்புமணி ராமதாஸ்
உலகில் இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மனிதர்கள் நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவே ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உலகின் எல்லாக் கேடுகளுக்கும் காரணமான நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட உறுதியேற்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பட்டுள்ளதாவது:
உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ஆம் தேதி கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதை 2023ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன் வைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட இந்த முழக்கம் இப்போது மீண்டும் வைக்கப்பட்டிருகிறது. உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவு என்பதால் நடப்பாண்டின் உலகச் சுற்றுச்சூழல் நாள் முதன்மைத்துவம் பெறுகிறது.
பிளாஸ்டிக் குப்பை சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் வழிகின்றன, சுற்றுப்புறம் மாசுபடுகிறது. சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்தி டெங்கு, மலேரியா எனப்பல நோய்களுக்கு காரணமாகிறது. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்புக்கும் பிளாஸ்டிக் பைகளே காரணமாகின்றன. பிளாஸ்டிக் பைகளால் ஆறுகள், குளங்கள், ஓடைகள், ஏரிகள், நிலத்தடி நீர் என எல்லா நீர்வளமும் கடுமையாக மாசுபடுகிறது. பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்ட குப்பையை எரிப்பதால் மிக ஆபத்தான நச்சுவாயுக்கள் காற்றில் கலக்கின்றன. டையாக்சின் உள்ளிட்ட பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியாகி புற்றுநோய், ஆண்மைக் குறைவு, குழந்தையின்மை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உலகின் எல்லாக் கேடுகளுக்கும் காரணமான நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட இந்த நாளில் உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.