1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (13:49 IST)

கடந்த 27 மாத கால தி.மு.க. ஆட்சியில், வன்முறை வெறியாட்டம்- ஓபிஎஸ்

சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில், இளங்கலை 2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு காரணமாக ஒரு பிரிவு மாணவர்கள் பட்டாசு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் சமூகவலைதள பக்கத்தில்,

‘’கடந்த 27 மாத கால தி.மு.க. ஆட்சியில், வன்முறை வெறியாட்டம், பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல், வெடிகுண்டு கலாச்சாரம், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகியவை அன்றாடம் தலைவிரித்து ஆடுகின்ற நிலையில், சென்னை குருநானக் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பூண்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சென்னையில் உள்ள கல்லூரியில், பட்டப் பகலில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுகிறது என்றால் அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டே செல்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

மேற்படி சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இனி வருங்காலங்களில் இதுபோன்ற வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

தனியார் கல்லூரியில், இளங்கலை 2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு காரணமாக ஒரு பிரிவு மாணவர்கள் பட்டாசு வீசிய சம்பவம் தொடர்பான   விசாரணையில் 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது,  இந்த மோதல், பட்டாசு வீசியது குறித்து கைதான 10 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.