செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha
Last Updated : புதன், 23 அக்டோபர் 2019 (13:18 IST)

திருடனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நகைக்கடை உரிமையாளர் - என் தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற நூதன திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் முருகன்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். இவர்  முருகனின் சகோதரி மகன். இந்த கூட்டு கும்பல் திருட்டினால் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டன என்றும் போலீசார் அறிவித்துள்ளது.


 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததையடுத்து ஒவ்வொரு நாளும் காவல் துறையினரின் தீவிர விசாரணையில் நாளுக்கொரு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் லலிதா நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் , போலீஸ் விசாரணையில் இருக்கும் குற்றவாளி முருகனிடம் அரை மணி நேரம் பேச அனுமதியுங்கள் என்று கேட்டு இருந்தார். பின்னர் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டும் பேச அனுமதி தரப்பட்டது.
 
அப்போது நகை கடை உரிமையாளர்கள் கிரண் குமார் குற்றவாளியிடம், எனக்கு லலிதா நகைக்கடையின் பேரில் நிறைய கிளைகள் இருக்கிறது. அதிலும் திருச்சி கடையை மட்டும் திட்டமிட்டு திருடியதற்கு என்ன காரணம்? அதோடு எந்த சுவற்றில் துளை போட்டால் நகைகள்  உள்ள இடத்திற்கு செல்ல முடியும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார். 


 
அதற்கு யோசித்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு பதிலளித்த கொள்ளையன், 
நானும் என் மனைவியும் உங்களுடைய நகைக்கடைக்கு 10 முறைக்கு மேல் ஆவது நகை வாங்க வந்திருக்கிறோம். என் மனைவி நகைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் கடையை நான்கு புறமும் கவனித்து எப்படி உள்ளே போக முடியும் என திட்டம் போட்டு இருந்தேன் என்று கூறினார். உடனே கிரண் குமார் சரி எனக்கு குழப்பம் தீர்ந்தது. ரொம்ப நன்றி என்று கூறினார். குற்றவாளியும் ஏன்? சார் எனக்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த கிரண் குமார், "இல்ல எனக்கு திருட்டு போன நகைகள் பற்றி எனக்கு கொஞ்சமும் கவலை இல்லை... நான் இன்சூரன்ஸ் செய்துள்ளேன். அதுமட்டுமில்லாமல் , அதை விட அதிகமாக சம்பாதிக்கும் தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது. எனது கவலையெல்லாம் ஒன்று தான் இவ்வளவு பெரிய கடையில் நிறைய காவலாளிகள், கேமராக்கள் இருக்கும் போது உனக்கு எப்படி துளை போட்டு உள்ள வர தைரியம் இருந்தது. என் கடையில் உள்ள யாராவது தான் உனக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று நான் நினைத்து மிகவும் குழம்பி போயிருந்தேன். ஆனால், என் கவலை எல்லாம் எனது கடையில் வேலை பார்ப்பவர்களே திருடுவதற்கு காரணமாக இருப்பார்களா! என்றும் யோசித்தேன் . 

அப்படி அவர்கள் செய்திருந்தால் தவறும்  என் மீது தான் என்று அர்த்தம். ஏனென்றால், என் கடையில் வேலை செய்பவனுக்கு பணத்தேவை இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை நான் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என பல குழப்பங்களில் என் மனம் என்னை வாட்டியது. அதனை தெரிந்துகொள்ளவேண்டும்  என்று நினைத்து தான் நான் உன்னை தேடி வந்தேன். தற்போது எனக்கு குழப்பம் தீர்ந்து விட்டது ரொம்ப நன்றி என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் கிரண். 
 
இதை கேட்ட போலீஸ் அதிகாரியே  “ராயல் சல்யூட் ” அடித்தார். தொழிலாளிகள் மீது லலிதா கடை உரிமையாளர்கள் வைத்துள்ள இந்த பற்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளது