மாணவர் போலீஸில் ஹிஜாப் அணிய கோரிக்கை! – கேரள அரசு மறுப்பு!
மாணவர் போலீஸ் படையில் இணையும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொள்ள கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது.
கேரளா காவல்துறையால் மாணவர் போலீஸ் படை என்ற தன்னார்வல அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த படையில் சேரும் மாணவ, மாணவியருக்கு சட்டம், ஒழுக்கம், கடமை, சேவை செய்தல் போன்றவை கற்பிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த படையில் இணைபவர்களுக்கு சீருடையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீருடையோடே ஹிஜாப் அணிந்து கொள்ள அனுமதி கேட்டு எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கையை கேரள அரசு மறுத்துள்ளது. சீருடை வழங்குவதே பால், மத பேதங்களை களைந்து சமநிலையை உணர்த்துவதற்காகதான். மேலும் இந்த துறையில் இதை அனுமதிக்கும் பட்சத்தில் பிற துறையினரும் இப்படியான கோரிக்கைகளை வைப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.