ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (15:41 IST)

முகம் கழுவ சென்ற மாணவி; நொடியில் மரணித்த கொடுமை – கரூரில் சோக சம்பவம்!

கரூர் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் முகம் கழுவ சென்றபோது மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் பசுபதிபாளையம் முதல் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மகள் கோமதி அருகிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சமீப காலமாக கோமதி உடல்நல குறைவால் பள்ளிக்கு அதிகம் செல்லாமல் இருந்திருக்கிறார். அவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்று மருத்துவம் பார்த்த பிறகே குணமாகி இருக்கிறார்.

குணமான நிலையில் நீண்ட நாள் கழித்து மீண்டும் பள்ளிக்கு சென்றிருக்கிறார் கோமதி. பள்ளிக்கு சென்ற கோமதிக்கு தலைசுற்றல் வருவது போல உணரவே ஆசிரியரிடம் சொல்லிவிட்டு முகம் கழுவ கழிப்பறைக்கு சென்றிருக்கிறார். கழிப்பறை சென்ற கோமதி மயங்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவிகள் ஓடிச்சென்று ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியைகள் கோமதியின் பெற்றோருக்கு தகவல் சொல்லிவிட்டு உடனடியாக கோமதியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே கோமதி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் அறிந்து மருத்துவமனை விரைந்த பெற்றோர் கோமதி இறந்தது தெரிந்து கதறி அழுதுள்ளனர்.

கோமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவி கன நேரத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பசுபதிப்பாளையம் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.