1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (14:56 IST)

அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள் செலவு ரூ. 15.87 லட்சம்?

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதில் போட்டியிட்ட பணம்பலமிக்க அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள், தங்களது தேர்தல் செலவின கணக்கில், மொத்தமாக, 15.87 லட்சம் மட்டும் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.


 

 
நடந்தது முடிந்த தேர்தலில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பணம் பலம்மிக்க, தி.மு.க., வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களமிறக்கப்பட்டார். 
 
அய்யம்பாளையம் அ.தி.மு.க., பிரமுகர் அன்புநாதன் வீடு மற்றும் குடோனில் நடந்த ரெய்டில், 4.77 கோடி ரூபாய் பணம் சிக்கியது. அதேபோல், தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி வீடு மற்றும், அவரது மகன் வீட்டில் நடந்த ரெய்டில், 1.98 கோடி ரூபாய் சிக்கியது. இதுமட்டுமல்லாது, அரவக்குறிச்சியின், 1.98 லட்சம் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., தரப்பில், தலா, 3,000 ரூபாய் வீதம், 59.40 கோடி ரூபாய்; தி.மு.க., தரப்பில், தலா, 2,000 ரூபாய் வீதம், 39.60 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வேட்பாளரகள், தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அரவக்குறிச்சி தேர்தல் ரத்தால், அதில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது இறுதி தேர்தல் கணக்கை தாக்கல் செய்ய தேவையில்லை என்று கூறப்படுகிறது. 
 
இருப்பினும், இரண்டு கட்டமாக தாக்கல் செய்த தேர்தல் செலவு கணக்கு, கரூர் மாவட்ட இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அரவக்குறிச்சி போட்டியிட்ட, 36 வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ளனர். 
 
இதன்படி, அ.தி.மு.க., செந்தில்பாலாஜி, பிரசாரம், வாகனம், ஆடல், பாடல், பட்டாசு, நடிகர் பிரசாரம், பொதுக் கூட்டம் உள்ளிட்ட காரணங்களுக்கு, ஐந்து லட்சத்து, 41 ஆயிரத்து, 159 ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளார். 
 
தி.மு.க., பழனிசாமி, டீசல், சாப்பாடு, கட்சி கொடி, போஸ்டர் உட்பட பல்வேறு நிகழ்வுகளுக்கு, 10 லட்சத்து, 46 ஆயிரத்து, 253 ரூபாய் செலவு செய்துள்ளதாக கணக்கு தாக்கல் செய்துள்ளார். இவர்கள், இரண்டு பேரும், மொத்தமாக, 15 லட்சத்து, 87 ஆயிரத்து, 412 ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்