1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anadakumar - posted by Dinesh
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (21:48 IST)

கல்லூரிக்காலம் என்பது கற்பதற்கே காதலுக்கல்ல!

“கல்லூரிக்காலம் என்பது கற்பதற்கே காதலுக்கல்ல” என்று  அரசு கலைக் கல்லூரி விழாவில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் கூறினார்.


 


கரூர் அரசு கலைக்கல்லூரியில் கணிதத்துறை மற்றும் புள்ளியல் துறையில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சியும், ஆசிரியர் தின விழாவும், கல்லூரி மூத்த மாணவர்களால் சிறப்பாக கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்தது.

இவ்விழாவில், கணிதவியல் துறை தலைவர் எஸ்.மூகாம்பிகை தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், துவக்க உரையில் கூறியதாவது, “புதுமாணவர்களுக்கு ராக்கிங் இல்லாது வரவேற்பு தரும் சிறப்பு நம் கல்லூரிக்கு உண்டு, புதிய மாணவ, மாணவிகள் அச்சமோ, தயக்கமோ கொள்ள வேண்டியதில்லை. மூத்த மாணவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு பெருமை மிக்க துறையின் பாரம்பரியத்தையும் காப்பாற்றுங்கள்” என்றார்.

ஆசிரியர் தினத்தையொட்டி கல்லூரி முதல்வருக்கு நூலாடை அணிவித்து நூல்கள் பரிசாக வழங்கினார்.  பின், புதிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனாக்களை வழங்கினார். இதை அடுத்து, பழநியப்பன் பேசியதாவது, ”பாரம்பரியமிக்க சிறந்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவ, மாணவிகள் கொடுத்து வைத்தவர்கள் ஆவார்கள். கல்லூரி பருவம் உங்களது வாழ்க்கையை உறுதி செய்கின்ற பருவம், குறிக்கோள் இலக்கோடு, கவனம் சிதறாமல் கற்றால் முடிச்சூட்டிக் கொள்ளலாம், ஒழுக்கம், பண்பாடு இவையே உங்கள் அணிகலன்.

கல்லூரி படிப்பு என்பது கற்பதற்கே, காதல் காதலுக்கல்ல. பார்ப்பதும், சிரிப்பதும், பழுகுவதும் காதல் தொடரும் வாழ்க்கைக்கு வழி அல்ல. அறிந்து புரிந்து தெளிந்து செயல்படுவது கல்வி, அதைப்போலத்தான் காதலும். புரிதலின்றி மாயையில் சிக்கி தோல்வி எனப்புலம்பி கொல்ல முயல்வதும், தற்கொலையும் கொலைத்தனம் அது மனித மாண்பல்ல, எனவே கற்க வேண்டியதே முதன்மை” என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், பேராசிரியை கல்பனா வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சியின் இறுதியில் சுதா நன்றி கூறினார்.