1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:20 IST)

மோடிக்கு எதிர்ப்பு - கருப்பு சட்டையணிந்த கருணாநிதி, ஸ்டாலின்

தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பாரதிராஜா தலைமையிலான அமைப்பும் விமான நிலையத்தில் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் எனக் கூறியது. 
 
அதன்படி இன்று காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், கவுதமன், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கங்கள் எழுப்பினர்.  விமான நிலையத்தில் அவர்கள் நுழைய முயன்றதால் அங்கிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றனர். 
 
அப்போது, இயக்குனர் அமீர் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியே திரும்பிப் செல்லுங்கள். அதை அமைத்து விட்டு தமிழகத்திற்கு வாருங்கள். முதல்வரும், துணை முதல்வரும் இன்றே மோடியிடம் கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குரல் எழுப்பினார். 
 
அதேபோல், சென்னை ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனும் கைது செய்யப்பட்டார்.  அதேபோல், தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது.
 
ஒருபுறம் காவிரி மீட்பு பயணம் என அறிவித்து மு.க.ஸ்டாலின் நடை பயணத்தை இன்று காலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.