காவிரி உரிமை மீட்பு பயணம்: ஸ்டாலின் தலைமையில் 3-வது நாளாக நடைபயணம் தொடங்கியது
தமிழகத்தில் காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராட்டங்களின் ஒரு பகுதியாக காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை திருச்சியில் உள்ள முக்கொம்பில் கடந்த 7-ந் தேதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று தஞ்சாவூரில் 2 ஆவது நாளாக காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வாண்டையர் குடியிருப்பு வரை நடைபயணம் மேற்கொண்டார்.
மு.க.ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணம் 3-வது நாளாக இன்று காலை தஞ்சை மாவட்டம் அன்னப்பன் பேட்டையில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற நாளை திருவாரூரிலும், 11-ந்தேதி நாகையிலும் நடைபெறும். பின்னர் 13-ந்தேதி கடலூர் மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு பெறுகிறது.