செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (10:11 IST)

வீட்டுச் சிறையில் ஜெகத்ரட்சகன்: வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு கருணாநிதி காட்டம்

திமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.


 
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாத வருமான வரித்துறைக்கு வந்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை, மருத்துவக் கல்லூரி, விடுதிகள், தி.நகர் அலுவலகம், அடையாறு, நுங்கம்பாக்கம், மகாபலிபுரம் வீடுகள் உட்பட 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது.
 
இந்த அதிரடி சோதனையில் 200 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது ஜெகத்ரட்சகன் சுமார் 600 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
 
இந்த சோதனையின் போது வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
 
ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக் கைதி போல வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை.
 
ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரிகளை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் (illegal Detention).
 
வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகனை கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறையினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016 க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போது ஜெகத்ரட்சகனின் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிக்கிறது. என திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.