1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:03 IST)

கறிவேப்பில்லை கொசுறு இனி கிடையாது! – கடைக்காரர்கள் கறார்!

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கறிவேப்பிலை விலை உயர்வால் இனி கொசுறு கிடையாது என கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதுமே அண்ணாச்சி கடைகளோ, அடுத்த தெரு காய்கறி கடைகளோ எங்கு பொருள் வாங்கினாலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி கொசுறாக கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. சமீபத்தில் கறிவேப்பிலைக்கு ஏற்பட்ட கிராக்கி இந்த பண்பாட்டிற்கே உலை வைத்துள்ளது.

தட்டுப்பாடு இல்லாமல் ஊர் முழுவதும் விளைந்திருக்கும் கறிவேப்பிலை விற்பனைக்கு குறைந்த விலைக்கே வரும். ஆனால் சமீப காலமாக பெட்ரோல் விலைக்கு போட்டி போட்டுக் கொண்டு கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது. மதுரையில் இன்றைய நிலவரப்படி கறிவேப்பிலை கிலோ ரூ.120 க்கு விற்பனையாகியுள்ளது. வேலூரில் கிலோ ரூ.150 ஆக விற்பனையாகியுள்ளது.

கறிவேப்பிலைக்கு ஏற்பட்ட இந்த திடீர் கிராக்கியால் கொசுறு கொடுத்து ஆகாதென்று முடிவெடுத்த கடைக்காரர்கள் கறிவேப்பிலை கொசுறு கிடையாது என்றே அறிவித்து விட்டார்களாம் மதுரை, வேலூர் வட்டாரங்களில்..! எனினும் சமையலுக்கு அத்தியாவசியமாய் இருப்பதால் கறிவேப்பிலையை காசு கொடுத்து வாங்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.