திமுகவுக்கு காங். ஆதரவு! ஆனால் குஷ்பு மட்டும் விஷாலுக்கு ஆதரவா?
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் அவர்களுக்கு கூட்டணி கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. மேலும் விரைவில் காங்கிரஸ் தலைவர்கள் மருதுகணேஷூக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யவும் உள்ளனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில் விஷாலுக்கு வாழ்த்து கூறி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார் குஷ்பு என்று கராத்தே தியாகராஜன் குஷ்பு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் குஷ்பு மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.