எம்ஜிஆர் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம்: பிறந்த நாளில் கனிமொழியின் ஃபேஸ்புக் பதிவு!
எம்ஜிஆர் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம்:
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எம்ஜிஆரை பெயரை வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்ஜிஆர் பெயரை சொந்தம் கொண்டாடி வருகிறார்
இந்த நிலையில் தற்போது திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது பேஸ்புக் பதிவில் எம்ஜிஆர் மடியில் தான் சிறுவயதில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் அதில் மேலும் பதிவு செய்துள்ளதாவது:
பழைய புகைப்படங்களைப் பார்ப்பது ஒரு புதையலை தேடுவது போன்றது. விலைமதிப்பற்ற அந்த புகைப்படங்கள், எந்த நினைவுகளை தன்னுள் புதைத்துவைத்திருக்கும் என்று நமக்குத் தெரியாது. என் அம்மாவின் புகைப்படக் தொகுப்புகள் எப்போதும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியங்களைத் தருபவை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் தான்.
அரசியல் மாறுபாடுகளை எல்லாம் கடந்து என் அப்பாவுடன் நெருங்கிய நண்பராக இறுதி வரை இருந்த முன்னாள் முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுடன் நான் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நடிகரும், தலைவருமான திரு. என்.டி.ஆர் அவர்களுடன் நான் இருக்கும் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அவரது மகள் புரந்தேஸ்வரி எனது மிகச்சிறந்த தோழி. அவர் ஒரு சிறந்த பெண்மணி. அவர் அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் தெளிவாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கும் விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த படத்தை நான் அவருக்கு அனுப்புவேன்.
எனக்கு எனது அப்பாவின் நினைவு எப்போதும் இருப்பதைப் போல் அவருக்கும் அவரது அப்பாவின் நினைவு இருக்கும் என்பது தெரியும். இருவரும் மிகப்பெரிய ஆளுமைகள், பிராந்தியக் கட்சிகளுக்கு புதிய பாதையை வகுத்துத் தந்தவர்கள், நமது ஜனநாயக அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தை மறுவரையறை செய்தவர்கள்.
இவ்வாறு கனிமொழி பதிவு செய்துள்ளார்