திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (11:25 IST)

திமுகவோடு கூட்டணிக்கு ரகசிய பேச்சுவார்த்தையா? – வெளிப்படையாக சொன்ன கமல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைக்க ரகசியமாய் பேசி வருவதாக வெளியான தகவல் குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன், கூட்டணி அமைப்பது குறித்த விவாதங்களும் இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக நல்லவர்களுடன் கூட்டணி என கமல்ஹாசன் அழைத்தும் கட்சிகள் எதுவும் முன் வராத நிலையில் ரஜினி தொடங்கும் புதிய கட்சியோடு கூட்டணி இருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது மநீம, திமுகவுடன் கூட்டணி அமைக்க ரகசியமாக பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவோடு கூட்டணி அமைக்க உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.