ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (09:27 IST)

நோ கேம்.. ஒன்லி ஆன்லைன் க்ளாஸ்; வீட்டை விட்டு ஓடிய சிறுவர்கள்! – பெற்றோரிடம் ஒப்படைப்பு!

ராணிப்பேட்டையில் ஆன்லைன் க்ளாஸில் படிக்க சொல்லி வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஓடிய சிறுவர்கள் மீண்டும் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையை சேர்ந்த சேகரின் மகன்கள் 11 வயதான புவனேஷ் மற்றும் 4 வயதான கிஷோர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்துள்ளார்கள். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில் சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சிறுவர்கள் இருவரும் வாலாஜாபேட்டையில் பஸ் ஏறி திருத்தணி சென்றுள்ளனர். அங்கிருந்து எங்கு செல்வது என தெரியாமல் நின்றிருந்த சிறுவர்கள் மீது பயணிகளுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களை போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வர சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.