செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (14:24 IST)

மக்கள் மறந்துடுவாங்கன்னு காத்திருக்கீங்களா? – அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

சாத்தான்குளம் வழக்கை தமிழக அரசு தட்டி கழிக்க முயல்வதாக கூறியுள்ள கமல்ஹாசன் குற்றாவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்திய பென்னிக்ஸ் ராஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தாக்கியதாலேயே அவர்கள் மரணித்ததாக பலர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்த நிலையில், அரசின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ” சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி” என்று தெரிவித்துள்ளார்.