வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஜூன் 2020 (10:28 IST)

கொரோனா ஹாட்ஸ்பாட்களாக மாறும் மார்க்கெட்டுகள்! – நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மார்க்கெட் பகுதிகள் கொரோனா பரவும் சாத்தியத்தை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. அதற்கு பதிலாக மாதவரத்தில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளி இன்றி மாதவரம் சந்தையில் குவிவதால் அங்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மதுரையில் பரவை சந்தையை சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து மாட்டுத்தாவணி சந்தையிலும் கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என அங்குள்ள 1500 பேருக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சேலத்தில் 100க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 30க்கும் அதிகமான பாதிப்புகள் நேதாஜி காய்கறி மார்க்கெட் சார்ந்தவையாக உள்ளன. பெருநகரங்களில் மார்க்கெட் வழியாக கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதால் இதற்கு வேறு வழிமுறைகளை அதிகாரிகள் கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.