காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் - கமல்ஹாசன் காட்டம்

kamal
Last Modified புதன், 7 மார்ச் 2018 (13:24 IST)
பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார்.   
 
அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் சிலர் அவர்களில் 4 பேரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின் அந்த 4 பேர் மீதும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஹெச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் “பெரியார் விவகாரத்தில் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹெச்.ராஜா சொன்ன வார்த்தை அம்பு எய்தது போல், அதை திரும்பப் பெற முடியாது. பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை; சிலைகளையும், கவுரவத்தையும் தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என அவர் பதிலளித்துள்ளார். 
 
மேலும், காவிரி விவகாரத்தை திசை திருப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :