1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (18:53 IST)

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு: பொன்.மாணிக்கவேல் அதிரடி

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் மீட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர்சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டு வரப்படுகிறது. இந்த தகவலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு சிலையை கொண்டு வருவதற்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும், விமானச் செலவை 330 நாட்கள் அரசு மறுத்து வந்தது என்றும், உயர்நீதிமன்ற சிறப்பு புலனாய்வுக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மியூசியத்தின் பதிவாளர் செலவை ஏற்றுக் கொண்டார் என்றும், பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
 
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் இருந்து கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஐந்துக்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் காணாமல் போயுள்ளன. இந்தச் சிலைகள் பலரது கைகளுக்கு மாறி மாறி கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதாக சிலைத்தடுப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் தெரிய வந்தது. 
 
 
கடந்த 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்ட் கேலரி ஆஃப் செளத் ஆஸ்திரேலியா என்ற மியூசியம் இந்த நடராஜர் சிலையை 225 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு வாங்கி மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களின் உதவியால் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை உறுதி செய்த பொன் மாணிக்கவேல், இந்த சிலையை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். 
 
 
ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் துணைக் கமிஷனர் கார்த்திகேயன் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் பின்னர் நடராஜர் சிலை நேற்று டெல்லி வந்தடைந்திருக்கிறது. இன்று இந்த சிலை சென்னைக்கும் விரைவில், கல்லிடைக்குறிச்சிக்கும் கொண்டு வரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.