திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 27 ஜூன் 2025 (14:14 IST)

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

MGR Kalaingar friendship

சமீபத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜ், முன்னாள் முதல்வர்களான கலைஞர் கருணாநிதி - எம்ஜிஆர் இடையேயான நட்பு குறித்து பேசியுள்ளார்.

 

அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற கழகத்தின் பெரும் தூண்களாக ஆரம்பத்தில் விளங்கியவர்களில் கருணாநிதியும், எம்ஜிஆரும் முக்கியமானவர்கள். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியிருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாக பல அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

அப்படியாக நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு விழாவில் கூறியுள்ளார். அந்த சம்பவமானது, எம்ஜிஆரின் படத்திற்காக கவிஞர் வாலி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்த பாடலின் வரியில் ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என எழுதிவிட்டு அடுத்த வரி என்ன எழுதலாம் என வாலி யோசித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கலைஞர் என்னவென்று கேட்க, அவரும் விஷயத்தை சொல்லியுள்ளார். உடனே கலைஞர் “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று போட சொன்னாராம். எம்ஜிஆர் அள்ளி அள்ளிக் கொடுப்பதை இவ்வளவு அழகாக கலைஞர் சொல்லிவிட்டு செல்ல, ஆனால் அந்த பாடல் பிடித்து போன எம்ஜிஆர், வாலியை அழைத்து பாராட்டினாராம்.

 

அப்போது கலைஞர்தான் அந்த வரியை எழுத சொன்னதாக வாலி கூறியுள்ளார். ஓ அப்படியா.. அப்படி என்றால் கலைஞருக்காக நான் எனது பாட்டில் சில வரிகளை சேர்க்கிறேன் என்று முடிவு செய்த எம்ஜிஆர் ”நான் செத்து பொழச்சவண்டா” என்று எங்கள் தங்கம் படத்தில் வரும் பாடலில் கலைஞரை குறிப்பிடும் வகையில் சில வரிகளை சேர்த்துள்ளார்.

 

ஓடும் ரயிலை இடைமறித்து

அதன் பாதையில் தனது தலை வைத்து ...

ஓடும் ரயிலை இடைமறித்து

அதன் பாதையில் தனது தலை வைத்து

உயிரையும் துரும்பாய் தான் மதித்து

தமிழ் பெயரை காத்த கூட்டம் இது

 

என்ற வரிகளை சேர்த்துள்ளாராம். இது கலைஞர் 1953ம் ஆண்டில் கல்லக்குடியின் பெயரை டால்மியாபுரம் என மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டவாளத்தில் தலை வைத்த சம்பவத்தை சொல்லிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறாக இருவரது நட்பும் இருந்து வந்ததாக சத்யராஜ் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K